🙏 ஓம் நமச்சிவாய | கோவில் நேரங்கள்: காலை 6:00 - 11:00 & மாலை 5:00 - 7:30
முகப்பு பூஜை & சேவை நன்கொடை அளி தொடர்புக்கு

கோவில் வரலாறு

அருள்மிகு ஸ்ரீ பகலாமுகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோவில்

Temple Architecture
தல வரலாறு மற்றும் கோவில் அறிமுகம்

வரலாறு மற்றும் அறிமுகம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் பேரூராட்சியில் அருள்மிகு ஸ்ரீ பகலாமுகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலின் திருப்பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மிகச் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டது. தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று நிறைவுற்றது. தற்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் நாள்தோறும் வந்து தரிசனம் செய்யும் வகையில் இக்கோவில் சிறப்பாக இயங்கி வருகிறது.

இத்திருக்கோவிலை நிர்மாணிப்பதில் பொத்தனூரைச் சேர்ந்த திரு. சிவப்பிரகாசம் மற்றும் திருமதி தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து பெரும் முயற்சியும் அர்ப்பணிப்பும் செய்து முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

ஸ்ரீ பகலாமுகி அம்மனின் சிறப்பும் மகிமையும்

அம்பிகையின் தச மகா வித்யா அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் "ஸ்ரீ பகலாமுகி" ஆகும்.

நாவடக்கத்தின் தெய்வம்:

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமான நற்குணம் நாவடக்கம் ஆகும். பக்தர்களுக்கு நாவடக்கத்தையும், நாவினால் வரும் இன்னல்களிலிருந்து பாதுகாப்பையும் அருளும் மகாசக்தியாக ஸ்ரீ பகலாமுகி அம்பாள் விளங்குகிறாள்.

பெயர்க் காரணம் மற்றும் தத்துவம்:

"பகலாமுகி" என்ற பெயர் "வல்கா" என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். இதற்கு "கடிவாளம்" அல்லது "எதிரிகளை அடக்கி ஒடுக்குபவள்" என்று பொருள். எதிரிகளின் தீய எண்ணங்களையும், துன்பம் தரும் செயல்பாடுகளையும் செயலிழக்கச் செய்து, நல்லவர்களைக் காக்கும் பேராற்றல் கொண்டவள்.

திருவுருவ அமைப்பு:

அன்னை பகலாமுகி அமிர்தம் நிறைந்த பாற்கடலில், மஞ்சள் தாமரை மலர் பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தலையில் பிறைநிலவைச் சூடி, பொன்மேனியாகக் காட்சி தருகிறாள். மஞ்சள் பட்டு உடுத்தி, தங்கம் போல் ஜொலிப்பதால் அன்னைக்கு "பீதாம்பரி" என்ற திருநாமமும் உண்டு. அன்னை நான்கு கரங்கள் கொண்டு அருளுகிறாள். தன் பக்தர்களுக்கு இன்னல் விளைவிக்கும் எதிரிகளின் நாவைப் பிடித்து அடக்கி ஒடுக்கும் திருக்கோலத்தில் தீய சக்திகளை அழித்து, நன்மைகளை நிலைநாட்டுகிறாள்.

வழிபாட்டுத் தலத்தின் தனிச்சிறப்பு

பொதுவாக மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தாந்திரீக முறைப்படி வழிபடப்படும் ஸ்ரீ பகலாமுகி அம்மனுக்கு, தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் அமைந்திருக்கும் இத்திருக்கோவில் ஒரு மிகச் சிறந்த மற்றும் அரிய வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.

திருக்கோவிலில் அமைந்துள்ள சன்னதிகள்

  • ஸ்ரீ பசுபதீஸ்வரர் (சிவபெருமான் சன்னதி)
  • சமயக்குரவர் நால்வர்
  • அருள்மிகு தட்சிணாமூர்த்தி
  • அருள்மிகு துர்க்கா தேவி
  • அருள்மிகு வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் (முருகப்பெருமான்)
  • அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர்
  • அருள்மிகு காலபைரவர்
  • அருள்மிகு பிரம்மா
  • சப்தகன்னியர் (பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி உள்ளிட்ட பரிவார தேவிகள்)

விசேஷ தினங்கள் மற்றும் வழிபாடுகள்

பௌர்ணமி தோறும் சிறப்பு பௌர்ணமி பூஜை
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
கிருத்திகை தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி தோறும் ஸ்ரீ காலபைரவருக்குச் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள்
அமாவாசை வழிபாடு
வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ வழிபாடுகள்

விசேஷ தினங்களில் திருக்கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.

அனைத்து பக்த பெருமக்களும் பொத்தனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகலாமுகி உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்து, இறைவனின் சிறப்புகளை அறிந்து வழிபட்டு, அம்பாள் மற்றும் ஸ்வாமியின் திருவருளைப் பெற்று நல்வாழ்வு பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.